இந்திய அணியின் நட்சத்திர வீரராக, இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திச் சென்று கோப்பைகளை பெற்றுத் தந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி சினிமா தயாரிப்பில் இறங்கி அவரது மனைவி சாக்சியுடன் இணைந்து முதல் முறையாக தமிழில் எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரீட்) என்கிற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.
படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க கதாநாயகியாக நடிகை இவானா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நதியா மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்துள்ளார் நதியா.
படத்தின் டிரைலரை பார்க்கும்போது மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏற்படும் முட்டல் மோதல் தான் கதை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த படம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது பேசிய இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி, “இந்த படத்தின் கதை மாமியாருக்கும் மருமகளுக்குமான பிரச்சனை. இது உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் தங்களுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் விதமான யுனிவர்சல் பிரச்சனை என்பதால் அனைவரும் எளிதாக இந்த படத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த படம் உருவாகி உள்ளது” என்று கூறினார்.