மண்டேலா படத்தை இயக்கி தேசிய விருதும் பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் மாவீரன்.
ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவரான சிவகார்த்திகேயன் தனது திறமை மூலம் பத்திரிக்கையை ஒன்றில் வண்ணப் படக்கதை வரையும் வேலையில் சேர்கிறார். அதே சமயம் கூவம் ஆற்றின் கரையோரம் குடிசைப் பகுதியில் வசித்த அவர்களது வீடுகளை எல்லாம் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மாற்றுகிறார்கள்.
தரமற்ற பணிகளால் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தில் அடிக்கடி ஏற்படும் டேமேஜ் காரணமாக சிவகார்த்திகேயனின் அம்மாவுக்கும் கட்டட இன்ஜினியருக்கும் தகராறு ஏற்படுகிறது. தப்பு செய்தவர்களை தட்டி கேட்க பயப்படும் சிவகார்த்திகேயன் தான் வரையும் வண்ணப்படக் கதையில் இந்த பிரச்சனையை வெளிப்படுத்துகிறார்.
இதற்கிடையே திடீரென ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைக்கும் சிவகார்த்திகேயனுக்கு, அவருக்கு மட்டுமே வானத்தில் இருந்து ஏதோ ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் சொன்னபடியே இவர் செயல்படுவதால் ஆளும் கட்சி மந்திரியான மிஸ்கின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார். தரமற்ற கட்டிடங்களின் நிலை வெளியே தெரிகிறது.
இதில் வசிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைத்ததா ? சிவகார்த்திகேயனால் மிஸ்கினின் எதிர்ப்பை சமாளிக்க முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.
நாம் அவ்வப்போது கேள்விப்படுகின்ற, பார்க்கின்ற தரமற்ற அரசு கட்டிடங்கள் இடிந்து விழும் நிகழ்வுகளை மையப்படுத்தி ஒரு சமூக அக்கறையுடன் இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மடோன் அஸ்வின். முந்தைய படங்களிலிருந்து தனது தோற்றத்திலும் நடிப்பிலும் கூட வித்தியாசப்பட்டு தெரிகிறார் சிவகார்த்திகேயன். தான் உண்டு தன் வேலை உண்டு, பிரச்சனை எதற்கு என ஒதுங்கிப் போகும் சுபாவத்துடன் இருக்கும் சிவகார்த்திகேயன் எப்படி தன்னை அறியாமலேயே ஒரு வீரனாக மாறுகிறார் என்பதை காட்சிக்கு காட்சி அழகாக தனது நடிப்பால் உருவேற்றி இருக்கிறார். காமெடி ஆக்சன் இந்த இரண்டிலுமே வழக்கம்போல எளிதாக ஸ்கோர் செய்கிறார் சிவகார்த்திகேயன்.
ஹீரோவுக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்யும் வழக்கமான கதாநாயகி பாத்திரத்தில் அழகாக பொருந்தி இருக்கிறார் அதிதி சங்கர். அமைச்சராக மிஸ்கின். இதுவரை நடித்திராத பாத்திரத்தில் பொருத்தமான தேர்வு என சொல்ல வைக்கிறார். அவரை விட அவரது உதவியாளராகவே வந்து காருக்குள்ளேயே மிஸ்கினுக்கு வித்தியாசமாக பாடம் இருக்கும் நடிகர் சுனில் ஆச்சரியப்பட வைக்கிறார்.
இந்த படத்திற்கு இன்னொரு பக்கபலம் என்றால் நடிகர் யோகிபாபு தான். அவர் தனக்கு ஒரு வேலையை வாங்குவதற்கும் வாங்கிய வேலையை தக்க வைப்பதற்கு பண்ணும் சித்து வேலைகள் சிரிக்க வைக்கின்றது. இந்த படத்திற்கு காமெடி நிச்சயம் ஒரு பிளஸ் பாயிண்ட்.
நீண்ட நாளைக்கு பிறகு நடிப்பரசி சரிதாவை இந்த படத்தில் பார்க்க முடிந்ததில் சந்தோஷம். இவ்வளவு அருமையான நடிகை பல வருடங்களாக இடைவெளி விட்டு விட்டாரே என நினைக்கும் விதமாக தனது அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்.
தங்கையாக நடித்துள்ள மோனிகாவும் கவனிக்க வைக்கிறார். இது தவிர என்ஜினியர் மதன், வார்டு கவுன்சிலர் என பலரும் தாங்கள் பொருத்தமான தேர்வு என நிரூபிக்கிறார்கள்,
படத்தில் முகம் காட்டாமல் சிவகார்த்திகேயனுக்கு உத்தரவிட்டு உதவி செய்யும் குரலாக விஜய்சேதுபதியும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கிறார்.
வழக்கமாக சிவகார்த்திகேயனின் படங்களில் பாடல்கள் துள்ளலாக இருக்கும் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட்டும் ஆகிவிடும். இந்த படத்தில் பரத் சங்கரின் இசையில் அது மிஸ்ஸிங். படத்தில் குடிசை பகுதியிலும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் என பெரும்பாலான காட்சிகள் நகர்வதால் ஒளிப்பதிவாளர் விது அய்யனா சுழன்று சுழன்று வேலை பார்த்து இருப்பது நன்றாகவே தெரிகிறது.
சமூக அக்கறையுடன் கூடிய கதையை முதல் பாதையில் கலகலப்பாக நடத்திய இயக்குனர் அஸ்வின் இரண்டாவது பாதியில் கொண்டு செல்லும் விதத்தில் சற்று தடுமாறி இருக்கிறார். அதனால் வழக்கமான ஆக்சன் படங்கள் ரூட்டிலேயே இடைவேளைக்கு பின் பயணிப்பது சற்று ஏமாற்றம் தருகிறது. ஆனாலும் இந்த மாவீரன் திரைப்படம் நிச்சயமாக 100% பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.