V4UMEDIA
HomeReviewபாபா பிளாக் ஷீப் ; விமர்சனம்

பாபா பிளாக் ஷீப் ; விமர்சனம்

பள்ளி மாணவர்களின் நடைமுறை வாழ்க்கையை மையப்படுத்தி சமீப காலமாக படங்கள் வெளிவராமல் இருந்த நிலையில் அதை போக்கும் விதமாக வெளியாகி உள்ள படம் தான் பாபா பிளாக் ஷீப். ஆனால் படம் எப்படி இருக்கிறது ? பார்க்கலாம்.

ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தின் கீழ் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியும் ஆண் பெண் இருபாலர் படிக்கும் பள்ளியும் இயங்கி வருகிறது. ஒரு கட்டத்தில் பொருளாதார பிரச்சனையை சமாளிப்பதற்காக இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக்குகிறார்கள். ஆண்கள் பள்ளியிலிருந்து கோ எஜுகேஷன் பள்ளிக்கு வரும் ஐந்து மாணவர்கள் ஏற்கனவே அங்கே கடைசி நெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறார்கள்.

கடைசி பெஞ்ச் எங்களுக்குத் தான் என இரு தரப்புக்கும் போட்டி நடக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்சனையில் முதலில் சண்டையாகி பின் சமாதானம் ஆகிறார்கள். தங்களது திறமையை நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு விதமாக பள்ளி கலை விழாவை நடத்த முடிவு செய்கிறார்கள்.

அந்த சமயத்தில் அவர்களுக்கு எதிர்பாராத ஒரு சவால் ஏற்படுகிறது. சவாலை அவர்களால் சமாளிக்க முடிந்ததா ? அந்த சவால் அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது என்பது மீதிக்கதை.

அவ்வப்போது, ஏன் சமீபத்தில் கூட ஒரு பள்ளியின் மாடியிலிருந்து மாணவி ஒருவர் விழுந்து இறந்தார். அது தற்கொலையா, கொலையா என்கிற மிகப்பெரிய சர்ச்சை நிலவியது. இதன் பின்னணியில் மாணவர்களுக்கு அப்படி என்ன மன அழுத்தம் இருக்கக்கூடும் என்கிற கண்ணோட்டத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனரும் தன்னம்பிக்கை பேச்சாளருமான ராஜ்மோகன்.

இந்த படத்தில் தனது சக கூட்டாளிகளான யூடியூப் புகழ் நடிகர்களையே நடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அயஸ், நரேந்திர பிரசாத், விக்னேஷ் காந்த் ஆகியோர் தனித்து தெரிகிறார்கள். இவர்கள் குழுவில் இருக்கும் நண்பர்களுக்கும் இவர்களுக்கும் ஏற்படும் முட்டலும் மோதலும் தான் பாதி படத்தை கலகலப்பாக நகர்த்தி செல்கிறது.

கதாநாயகியாக இந்த இரண்டு குழுவினருக்கும் ஈடு கொடுத்து அவர்களை சமாளித்து நடித்து இருக்கிறார் அம்மு அபிராமி. மகளை பறிகொடுத்த தாயாக முக்கிய கதாபாத்திரத்தை நடிகை அபிராமி குணச்சித்திர நடிப்பை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசன் மாணவர்களின் உலகம் வண்ணமயமானது என்பதை தன் ஒளிப்பதிவால் பதிவு செய்துள்ள விதம் அருமை. சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் துல்லியம்.

படிக்கும் வயதில் மாணவர்களுக்கு எந்த விதத்தில் எல்லாம் பிரச்சனைகள் வருகின்றன, மன அழுத்தம் ஏற்படுகின்றன, சக நண்பர்களே உடன் இருக்கும் நண்பர்களின் பிரச்சினைகளை கவனிக்காமல் கோட்டை விடுவது, சக நண்பர்களின் மன உளைச்சலுக்கு அவர்களே காரணமாக இருப்பது என பல உண்மைகளை பொட்டில் அடித்தார் போல சொன்னதற்காக இயக்குனர் ராஜ்மோகனை தாராளமாக பாராட்டலாம்.

Most Popular

Recent Comments