கடந்த சில வருடங்களாகவே நடிகர் சசிகுமாரின் படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. அதே சமயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.
இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சசிகுமார். அந்த வகையில் தற்போது அவர் பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவரும் சமீபத்தில் வெளியான ருத்ரன் படத்தை இயக்கியவருமான் பைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் கஸ்தூரிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் நவீன் சந்திரா நடிக்கிறார். ஏற்கனவே 9 வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான பிரம்மன் படத்திலும் சசிகுமாருடன் இவர் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை உங்கள் நண்பன் என்கிற படத்தை இயக்கிய ரஞ்சித் மணிகண்டன் என்பவர்தான் இந்த படத்தை இயக்குகிறார்.