நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பராக, ஒரு நகைச்சுவை நடிகராக ஆரம்பத்தில் அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், அடுத்து ஒரு பாடகராக கபாலி படத்தில் எழுதிய நெருப்புடா என்கிற பாடல் அவரை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது.
அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா என்கிற படத்தை இயக்கியதன் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் அருண் ராஜா காமராஜ்.

இதைத்தொடர்ந்து கடந்த வருடம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்கிற படத்தையும் இயக்கினார். அடுத்ததாக என்ன படத்தை இயக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது திரைப்படத்தை விட்டு, வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ள அருண்ராஜா காமராஜ் லேபிள் என்கிற வெப் சீரிஸை இயக்க உள்ளார்.

ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இந்த வெப் சீரிஸில் கதாநாயகியாக தான்யா ஹோப் நடிக்கிறார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்த வெப் சீரிஸின் கதையை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த வெப்சீரிஸை தயாரிக்கிறது. இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, “ஒருவன் எந்த பகுதியை சேர்ந்தவன் என்பதை பொறுத்தே, அவனது குணாதிசயம் இருக்கும் என்கிற பொதுப்படை எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது. இதுவே அவர்களை தவறான வழியை நோக்கி செல்ல காரணமாகவும் அமைகிறது. இப்படி தனது வாழ்விடம் சார்ந்தே தனது வாழ்க்கை அமையும் என்பதை ஒருசிலரால் மட்டுமே மாற்றியமைக்கவும் முடிகிறது. ஆனால் இந்த சமூகம் தனது பொதுப்படையான பார்வையை மாற்றியமைக்குமேயானால் , ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க முடியும்” என்றார்