சுந்தரபாண்டியன் என்கிற வெற்றி படத்தின் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர் இயக்குனர் எ.ஆர்.பிரபாகரன். அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சில படங்களை இயக்கினாலும் அவருக்கு அந்த முதல் படம் போன்ற வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது முதன் முறையாக வெப் சீரிஸ் பக்கம் நுழைந்து செங்களம் என்கிற ஒன்பது எபிசோடுகள் கொண்ட வெப் சீரிசை இயக்கியுள்ளார் எஸ்ஆர் பிரபாகரன்.

இதை அபி&அபி சினிமாஸ் அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஜி5 ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் வரும் 24ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

அரசியல் களத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்த வெப் சீரீஸில் கதாநாயகனாக கலையரசன் நடிக்க, கதாநாயகியாக வாணி போஜன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சரத் லோகித்ஸ்வா, விஜி சந்திரசேகர், அறிமுக நடிகை ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வெப் சீரிஸின் புரமோஷன் நிகழ்ச்சியாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் அமீர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “இந்த வெப் சீரிஸ் ட்ரெய்லரை பார்த்தபோது, அதில் வாணி போஜன் நடந்து வருவதை பார்க்கும் போது இந்தி படம் ஒன்றில் நடிகை கத்ரீன கைப் நடந்து வருவது போல அவ்வளவு கெத்தாக இருந்தது. நான் இயக்கும் படம் ஒன்றில் கூட, அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க யோசித்து வந்தோம். அது கூட அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
இந்த வெப் சீரிஸில் கலையரசன் கதாபாத்திரத்தில் என்னைத்தான் முதலில் நடிக்க வைப்பதாக யோசித்ததாக இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் என்னிடம் கூறினார். ஒரு நல்ல கதையை மிஸ் பண்ணி விட்டேன்..

நான் கூட தற்போது உயிர் தமிழுக்கு என்கிற அரசியல் படத்தில் நடித்துள்ளேன். ஆனால் அது அரசியல் நையாண்டி படமாக உருவாகியுள்ளது. இந்த செங்களம் வெப்சீரிஸ் முழுக்க முழுக்க சீரியஸான அரசியல் பின்புலத்தில் உருவாகியுள்ளதை பார்க்க முடிகிறது. இதேபோன்று சீரியஸான அரசியல் களத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் படத்தில் நானும் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

இந்த வெப் சீரிஸில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வாணி போஜன் பேசும்போது, “இதன் படப்பிடிப்பில் நடித்து முடித்த பிறகு எனக்கும் கூட அரசியலில் ஈடுபடலாமா என்கிற ஒரு ஆசை வந்துவிட்டது” என்று தமாசாக கூறினார்.