மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அடுத்த அதிரடியாக உருவாகி வரும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் படத்தில் எப்போதுமே நட்சத்திரக் கூட்டம் அதிகமாக இருக்கும். அனைவரையும் சம முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்துவார் லோகேஷ் கனகராஜ்.
அந்த வகையில் இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அபிராமி வெங்கடாசலம், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
மிக முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். கேஜிஎப்-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய அளவில் சஞ்சயத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் சமீப நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார் சஞ்சய் தத். தற்போது காஷ்மீரில் அவரது காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து படக்குழுவினரிடம் இருந்து அவர் விடைபெற்று கிளம்பினார். இதற்கு அடுத்ததாக சென்னையில் நடைபெற இருக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் மீண்டும் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.