V4UMEDIA
HomeNewsKollywoodகோலாகலமாக கொண்டாடப்பட்ட மீனா 40 ; விழாவை சிறப்பித்த சூப்பர் ஸ்டார்

கோலாகலமாக கொண்டாடப்பட்ட மீனா 40 ; விழாவை சிறப்பித்த சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பெற்று பின்னர் கதாநாயகியாக மாறி, அதிலும் தனக்கென ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை மீனா. அதன் பிறகு திருமண வாழ்க்கையில் நுழைந்த பின் நடிப்பை குறைத்துக்கொண்டு குடும்பத்தை கவனித்து வந்தார்.

அவரது மகள் நைனிகா விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகை மீனாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த 1982ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, தனது திரையுலக பயணத்தில் வெற்றிகரமாக 40 வது வருடத்தை தொட்டுள்ளார். இதை கொண்டாடும் விதமாக பிஹைன்ட் வுட்ஸ் சேனல் மிகப்பெரிய விழா நடத்தி மீனாவை கவுரவித்தது.

இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அதுமட்டுமல்ல மீனாவுடன் சமகாலத்தில் நடித்த நடிகைகளான ரோஜா, தேவயானி, சங்கவி, சினேகா, ராதிகா, சங்கீதா, ப்ரீத்தா உள்ளிட்ட நடிகைகள் கலந்துகொண்டனர்.

அதுமட்டுமல்ல, மீனாவுடன் ஜோடியாக நடித்த ராஜ்கிரண், சரத்குமார், பாக்யராஜ் ஆகிய நடிகர்களும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் தாணு, போனி கபூர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மீனாவை வாழ்த்தினார்கள்.

குறிப்பாக மீனா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோதுதான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மீனா, பின்னாளில் அவரே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எஜமான் படத்தின் மூலம் ஜோடியாக அறிமுகமாவார் என அவர் மட்டுமல்ல ரசிகர்களே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அப்படி எஜமான், முத்து, வீரா என மூன்று படங்களில் இணைந்து நடித்த மீனா பல வருட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்தார்,

கடந்த வருடம் தனது கணவர் வித்தியாசாகர் காலமானதை தொடர்ந்து வருத்தத்தில் இருந்து வந்த மீனா கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இந்த விழா அவரை மீண்டும் கலகலப்பான சூழலுக்கு கொண்டு வந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

Most Popular

Recent Comments