HomeNewsKollywoodமயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் ; ரஜினிகாந்த் உறுதி

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் ; ரஜினிகாந்த் உறுதி

தமிழ் சினிமாவில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக பயணித்து வந்தவர் நடிகர் மயில்சாமி. கமலுடன் அவரது நண்பராக அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்து வெளிச்சம் பெற்ற மயில்சாமி, அதன்பிறகு உழைப்பாளி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.  2000க்கு பிறகு விவேக், வடிவேல் ஆகியோருடன் இணைந்து நடித்தபோது மிகப்பெரிய அளவில் நகைச்சுவைக்காக பேசப்பட்டார்.

மிமிக்ரி கலைஞர் ஆன இவர் சினிமா மட்டுமின்றி பல கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். 

தீவிரமான எம்ஜிஆர் ரசிகர்.. பக்தர் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு எம்ஜிஆர் பற்றி எப்போதும் பேசுவது மட்டுமல்லாமல் அவரது பாணியிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் கூட பாதிக்கப்பட்ட பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.

சிவ பக்தரான இவர் மாதந்தோறும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கேளம்பாக்கத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டு விட்டு வீடு திரும்பியபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இதை தொடர்ந்து திரை உலக பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரிலும் சோசியல் மீடியா மூலமாகவும் தங்களது அஞ்சலியையும் இரங்கலையும் தெரிவித்தனர்.

இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள தனது அண்ணனின் எண்பதாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து திரும்பிய பிறகு இன்று காலை மயில்சாமி வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது மயில்சாமியும் நானும் கிட்டத்தட்ட 40 வருட நண்பர்கள். அவர் தீவிரமான எம்ஜிஆர் பக்தர். அது மட்டுமல்ல தீவிர சிவ பக்தர். எப்போது என்னிடம் பேசினாலும் இவர்கள் இருவரை பற்றி மட்டும் தான் பேசுவார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை சந்திக்க சென்றாலும் அங்கிருந்தபடியே எனக்கு தொலைபேசியில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் என்னை மூன்று முறை அழைத்திருந்தார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என நினைத்து அதை அப்படியே மறந்து விட்டேன். 

நடிகர்கள் விவேக் மயில்சாமி ஆகியோரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு இவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமல்ல சமூக சிந்தனை கொண்டவர்கள். அவருடைய  மயில்சாமியின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று கூறினார்.

 அதுமட்டுமல்ல சிவபெருமானுக்கு ரஜினிகாந்த் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என கடைசியாக டிரம்ஸ் சிவமணியிடம் மயில்சாமி கூறியிருந்தார் என்பது எனக்கு தெரிய வந்தது. நிச்சயமாக அவரது கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

மயில்சாமி உடன் இணைந்து நடித்த பல நட்சத்திரங்கள் அவரது மறைவுக்கு நேரிலோ அல்லது சோசியல் மீடியா மூலமாகவோ கூட தங்களது இரங்கலை தெரிவிக்காத நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரிலேயே வந்து தனது நண்பருக்கு இறுதி விடை கொடுத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments