எவ்வளவு தான் திறமை இருந்தாலும் வசதிகள் இருந்தாலும் வாய்ப்புகள் தேடி வந்தாலும் பல நேரம் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்க்கையில் அவன் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும். பல பேர் இதை அனுபவ ரீதியாக உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள். இப்படி அதிர்ஷ்டம் என்பது உண்மைதானா ? அப்படி என்றால் உண்மையான அதிர்ஷ்டம் எது என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் லக்கி மேன்.
இந்த படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார் அவர் ஏற்கனவே கதையின் நாயகனாக நடித்த கூர்கா, தர்ம பிரபு, மண்டேலா, சமீபத்தில் வெளியான பொம்மை நாயகி உள்ளிட்ட படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றுள்ளன.
அந்த வகையில் இந்த லக்கி மேனும் நிச்சயம் ஒரு அதிர்ஷ்டக்காரனாக யோகி பாபுவையும் தயாரிப்பாளரையும் மாற்றுவார் என எதிர்பார்க்கலாம். பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள இந்த படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஃபீல் குட் காமெடி திரைப்படமான இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இங்குள்ள குறைவாக பேசப்படும் மக்களை பற்றியும் படம் பேசுகிறது. இதுவே படத்தின் அடிப்படை. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.