சினிமாவில் வளர துடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு அமைந்து விடாதா என காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு வாய்ப்பு நடிகர் கணேஷ் வெங்கட்ராமுக்கு வாரிசு படம் மூலமாக அமைந்து, தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் அதிர்ஷ்டமும் கைகூடியது.
தற்போது வெளியாகி வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் படம் முழுவதும் வரும்படியான வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.
ராதா மோகன் இயக்கத்தில் அபியும் நானும், கமல் நடித்த உன்னை போல் ஒருவன் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரி என அப்போது கணேஷ் வெங்கட்ராமனுக்கு கிடைத்த வரவேற்பு, தற்போது வாரிசு படத்தில் கிடைத்து வருவதை தியேட்டர்களில் பார்க்க முடிகிறது.
குறிப்பாக விஜய் ரசிகர்கள் கணேஷ் வெங்கட்ராமுக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதனால் ரொம்பவே நெகிழ்ந்து போய் இருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.
விஜய் ரசிகர்களின் இந்த அன்பு பற்றியும் விஜயுடன் வாரிசு படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் அவர் கூறும்போது, “வாரிசு படத்தில் முகேஷ் பாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. குறிப்பாக எனக்குப் பிடித்த விஜய்யுடன் திரையை பகிர்வது எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. தினமும் அவர் எனர்ஜியுடன் செட்டுகளுக்கு வருவதை பார்ப்பது, காட்சிகளை ஒத்திகை பார்ப்பது, எல்லாம். ஒரு நடிகராக எனக்கு கிடைத்த மிகப்பெரிய கற்றல் அனுபவம்.
விஜய் அண்ணா தனது பார்வையாளர்கள் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பை என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது. இப்போது திரையரங்குகளில் அதே காட்சிகளுக்கு மக்களின் கைதட்டல் ஆரவாரத்தை பார்க்கும் போது அதை உண்மை என்று நூறு சதவீதம் உணர முடிகிறது என்று கூறியுள்ளார்.