எந்த ஒரு கலைஞருக்கும் தனது படைப்புக்கு ஆஸ்கர் என்கிற உயரிய விருதை பெறுவது தான் இலக்காக இருக்கும். கடந்து சில வருடங்கள் வரை நமக்கு அந்த போட்டியில் நுழைவதே பெரும் கனவாக இருந்து வந்த நிலையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இரண்டு விருதுகளும் சிறந்த சவுண்டு இன்ஜினியராக ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருதுகளை வென்ற போது இந்தியாவே அவ்வளவு பரவசப்பட்டது.
அப்போது இருந்து தொடர்ந்து இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் உருவாகும் மகத்தான படைப்புகள் தொடர்ந்து ஆஸ்கருக்கான போட்டியில் பங்கேற்று வருகின்றன. ஆனால் கடந்த சில வருடங்களில் மீண்டும் ஒரு ஆஸ்கர் கனவு நமக்கு சாத்தியமாகுமா என்கிற சூழ்நிலை தான் தொடர்ந்து நிலவி வருகிறது.
அதே சமயம் ஆஸ்கருக்கு அடுத்ததாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதும் கூட படைப்பாளிகளின் இன்னொரு கனவுதான். கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் அதன் உருவாக்கத்திற்காக இந்தியாவையும் தாண்டி உலக அளவில் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்து வந்தது இந்த நிலையில் தான் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்த நாட்டுக்கூத்து என்கிற பாடலுக்கு தற்போது கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் இந்த விருதை வென்றுள்ளது இந்த பாடல்.
இதை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி, பாடலுக்கு இசையமைத்த மரகதமணி மற்றும் இந்தப்பாடலுக்கு ஆடிச்சிறப்பித்த நடிகர்கள் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், இளையராஜா உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இது பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில், “எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும் இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப்பை கொண்டு வந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி” என்று கூறியுள்ளார் இசைஞானி.
இளையராஜா கூறும்போது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கீரவாணி, ராஜமௌலி ஆகியோரின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.