HomeReviewதுணிவு ; விமர்சனம்

துணிவு ; விமர்சனம்

எச் வினோத் – அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவதாக உருவாகி இருக்கும் படம் துணிவு. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த கூட்டணி நிறைவேற்றியுள்ளதா ? பார்க்கலாம்

சென்னையில் பிரபல வங்கி ஒன்றில் கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் 500 கோடியை கைப்பற்ற ஒரு மோசமான போலீஸ் அதிகாரியின் திட்டத்தின் பேரில் கொள்ளையர்கள் களமிறங்குகின்றனர். ஆனால் ஏற்கனவே அங்கு அந்த பணத்தை கொள்ளையடிக்கும் திட்டத்துடன் அஜித் தனது ஆட்களுடன் என்ட்ரி கொடுத்து விட்டார். போலீஸ் அதிகாரி அனுப்பிய ஆட்களை அடித்து தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் அஜித்.

அதே சமயம் தங்கள் இரண்டு குரூப்புகளை தவிர மூன்றாவதாக ஒரு அணியும் இதே கொலையில் ஈடுபட்டுக்கொண்டு உள்ளே இருக்கின்றனர் என்கிற விஷயம் அஜித்துக்கு தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் அந்த மூன்றாவது அணியும் அஜித்தை மடக்கி தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

யார் அந்த மூன்றாவது அணி ? எதற்காக அஜித்தை அவர்கள் மடக்குகின்றனர் ? உண்மையிலேயே அஜித் யார் ? அவர் ஏன் இந்த வங்கியை கொள்ளை அடிக்க முயற்சிக்கிறார் என்பதற்கு மீதி படம் விடை சொல்கிறது.

படத்தில் அஜித் அறிமுகமான காட்சியில் இருந்து அவரது நடிப்பையும் நடவடிக்கைகளையும் பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்குமே மங்காத்தா அஜித் ரிட்டன் வந்துவிட்டார் என்கிற மகிழ்ச்சி தானாகவே தொற்றிக் கொள்கிறது. இதுதான் நாங்கள் பார்க்க நினைத்த அஜித் என உற்சாகத்துடன் படம் பார்க்கும் அனைவருக்குமே தொடர்ந்து படம் முழுவதும் தனது நடிப்பாலும் நகைச்சுவையாலும் வசனங்களாலும் ஆக்சனாலும் அந்த உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் அஜித். குறிப்பாக அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டர்களில் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆகிறது.

அஜித்தின் தோழியாக மஞ்சு வாரியர். இதற்கு முன் இவர் இப்படி ஒரு கதாபாத்திரம் செய்தது இல்லை. ஆனால் இந்த படத்தில் ஆக்ஷனில் பிரமிக்க வைக்கிறார் மஞ்சு வாரியர்.

நல்ல போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி. வங்கி உள்ளே இருக்கும் கொள்ளையர்களை மடக்க அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. வங்கி சேர்மன் ஆக சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கொக்கென், அந்த கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி உள்ளார். அவரது கீழ் பணியாற்றும் நடிகர் சிஜாய் வர்கீஸ் கதாபாத்திரமும் மிக சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறார்.

வலிமை படத்திலும் கெட்ட போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் பயணித்த ஜி.எம் சுந்தருக்கு இந்த படத்திலும் அதேபோன்று வங்கி மேலாளராக ஒரு நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மூலமாக வங்கிகளில் நடக்கும் குளறுபடிகளை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் இயக்குனர் வினோத்.

இவர்கள் தவிர மோசமான போலீஸ் அதிகாரியாக வரும் அஜய், வில்லனுக்கு துணையாக இருக்கும் வங்கி அதிகாரியாக பிரேம்குமார், போலீஸ் அதிகாரி பக்ஸ் என அனைவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

இதில் இந்த கதாபாத்திரங்களை தாண்டி கவனம் இருப்பவர்கள் சேனல் ஒன்றின் நிருபராக நடித்துள்ள பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் படம் முழுக்க கலகலப்பு பட்டாசுகளை வெடிக்க வைக்கிறார். அது மட்டுமல்ல தீனா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த மகாநதி சங்கருக்கு இந்த படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் விதமான முக்கியமான கதாபாத்திரம். அவரும் பின்னி எடுத்துள்ளார்.

மேலும் படத்தில் நடித்துள்ள தர்ஷன், தங்கதுரை, வளவன் போன்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான இடத்தை அழகாக தக்க வைத்துக் கொண்டுள்ளனர். படத்தில் அமீர், பாவ்னி, ஜிபி முத்து, சிபி என சில பிக்பாஸ் பிரபலங்களும் குறிப்பிடத்தக்க காட்சிகளில் வந்து செல்கின்றனர்.

படத்தின் எண்பது சதவீத காட்சிகளுக்கு மேல் ஒரு வங்கிக்குள்ளேயே நடப்பது போல படமாக்கப்பட்டு இருந்தாலும் கொஞ்சம் கூட போரடிக்காத வகையில் காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். இதற்கு ரொம்பவே முக்கியமான தூண்களாக நின்றிருப்பவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா மற்றும் சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் இருவரும் தான். இவர்களுக்கு தனது பின்னணி இசையால் பக்க பலமாக கூடவே நின்று உள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான்.

வங்கி கொள்ளை படம் தானே என நினைத்து உள்ளே வருபவர்களுக்கு வங்கியில் என்னென்ன விதமான மோசடிகள் நடக்கின்றன, மக்களின் பணம் எந்த விதமாகவெல்லாம் சுரண்டப்படுகிறது என்பது குறித்து அழகாக பாடம் எடுத்து உண்மையான வங்கி கொள்ளையர்கள் யார் என அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர் எச்.வினோத்.

நிச்சயம் சமூக நோக்கிலான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான ஒரு படமாக இதை உருவாக்கியதற்காக இயக்குனர் வினோத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments