கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் தமிழகம் முழுதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பெரிய படங்களுக்கு இணையான வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்ல தெலுங்கிலும் இந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வசூலை குவித்தது. தற்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாம் என்கிற அளவிற்கு அந்த படத்தின் வெற்றி அமைந்துள்ளது.


இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் இதில் செல்போனை வைத்து கையாளப்பட்திருந்த வித்தியாசமான கதை தான். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள பொய் இன்றி அமையாது உலகு என்கிற படத்திலும் இதே போன்று செல்போனை மையப்படுத்தி தான் கதை உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தில் நடிகர் விவேக் பிரசன்னா சாக்ஷி, அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண், ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள், இயக்குனர் சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவற்றை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.


இந்த படம் பற்றி இயக்குனர் சக்திவேல் கூறும்போது நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள். அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது.


இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக ‘பொய்யின்றி அமையாது உலகு’ தயாராகி இருக்கிறது” என்றார்