V4UMEDIA
HomeReviewலத்தி ; விமர்சனம்

லத்தி ; விமர்சனம்

விஷால் நடிப்பில் ஒரு போலீஸ் கதையாக, அதேசமயம் சற்றே மாறுபட்ட கோணத்தில் வெளியாகியுள்ள படம் தான் லத்தி.

கான்ஸ்டபிள் பொறுப்பில் இருக்கும் விஷால் லாக்கப்பில் இருக்கும் விசாரணை கைதியை அடித்து சித்தரவதை செய்தார் என மனித உரிமை அமைப்பால் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஒரு வழியாக எதிர்பாராமல் சந்திக்கும் தனது பழைய உயர் அதிகாரியான தலைவாசல் விஜய் மூலமாக டிஜிபி பிரபுவின் சிபாரிசை பெற்று மீண்டும் பணியில் சேர்கிறார்.

இந்த நிலையில் பிரபுவின் மகளுக்கு பிரபல ரவுடியான ரமணா மூலமாக அவமானம் ஏற்பட, அதற்கு பிரபுவுக்கு பழி தீர்க்கும் முயற்சியில் உதவியாக ரமணாவை லத்தியால் வெளுத்து வாங்குகிறார் விஷால். தன்னை முகத்தை மூடி அடித்ததால், அடித்தது யார் என்று தெரியாத நிலையில் சின்ன சின்ன விஷயங்களை வைத்து அது விஷால் தான் என கண்டுபிடிக்கிறார் ரமணா.

அதேசமயம் தான் மந்திரியின் மகளை திருமணம் செய்து கொள்ள இருப்பதால்,  யூனிபார்ம் இருக்கும் விஷால் மீது கை வைத்து சிக்கலில் மாட்டிக்கொள்ள  விரும்பாமல் அவர் பணியில் இல்லாத நேரத்தில் அவரை கொள்வதற்கு நேரம் பார்த்து காத்திருக்கிறார் ரமணா.

அப்படி ஒரு நேரமும் அவருக்கு வருகிறது. விஷாலுடன் கூடவே அவரது மகனும் எதிரிகளிடம் சிக்கிக்கொள்கிறார் அடுத்து நடந்தது என்ன என்பதை மீதிக்கதை.

பல படங்களில் அதிரடி போலீஸ் உயரதிகாரியாக நடித்து விட்டதாலோ என்னவோ இந்த படத்தில் ஒரு மாறுதலுக்காக கான்ஸ்டபிள் என்கிற சாதாரண ஒரு போலீஸ்காரராக தன்னை உருமாற்றி கொண்டுள்ளார் விஷால். சும்மா சொல்லக்கூடாது.. அந்த கதாபாத்திரத்தில் ரொம்பவே கச்சிதமாகவும் பொருந்தி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். உயர் அதிகாரிகளிடம் சல்யூட் போட்டு பணிந்து போவதாகட்டும் குடும்பத்தின் மீது பாசத்தை காட்டுவதாகட்டும் இடைவேளைக்கு முன்பு வரை இப்படி அமைதியாக காட்சி அளிக்கும் விஷால் இடைவேளைக்கு பின்பு ஆக்ரோசமாக விஸ்வரூபம் எடுக்கும் போது அதிர வைக்கிறார்.

இடைவேளைக்கு பிறகு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஒரே கட்டடத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எதிரிகளுடன் விஷால் தனி ஆளாக மோதுகிறார். ஆனாலும் அதை ஓரளவு லாஜிக்குடன் நம்பும்படியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

விஷாலின் மனைவியாக சுனைனா. ஜாடிக்கேத்த முடியாத சரியான ஜோடி, மிகவும் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி நம் மனதில் நிறைகிறார். இவர்களது மகனாக நடித்திருக்கும் அந்த சுட்டிப் பையனும் நம்மை கவர்கிறார்.

வில்லனாக ரமணா.. இடைவேளைக்கு முன்பு வரை தனது முகத்தை மூடிக்கொண்டு முகம் காட்டாமல் நடித்துள்ளார். இடைவேளைக்கு பின்பு தனது ஆக்ரோஷம் முகம் காட்டுகிறார். அவரது தந்தையாக நடித்து இருக்கும் மனிதரின் அசால்ட்டான வில்லத்தனம் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

உயர் அதிகாரிகளாக தலைவாசல் விஜய், பிரபு ஆகியது பங்களிப்பும் கச்சிதம். யுவன் சங்கர் ராஜாவின் இசை, குறிப்பாக இடைவேளைக்கு பின்னான பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை பல மடங்கு அதிகப்படுத்தி உள்ளது.

இடைவேளைக்கு முன்பு வரை அடுத்து என்ன நடக்கும், விஷால் சிக்கி விடுவாரா என்பது குறித்த ஒரு பரபரப்புடன் நேர்த்தியாக கதையை நகர்த்தி சென்றுள்ளார் அறிமுக இயக்குனர் வினோத்குமார். இடைவேளைக்கு பின் ஒரே கட்டடத்தில் அதிலும் முக்கால் மணி நேரம் சண்டைக்காட்சியாகவே ஒரு படத்தை நகர்த்தி செல்வதற்கு இமாலய துணிச்சல் வேண்டும் அதை ஓரளவு சரியாகவே செய்திருக்கிறார் இயக்குனர் வினோத் குமார்.

குறிப்பாக அந்த கட்டடத்திற்குள் விஷால் ஏன் நுழைந்தார் என்பதற்கு பின்னணியில் சொல்லப்படும் காரணம் நிச்சயமாகவே நாம் எதிர்பாராத ட்விஸ்ட் தான் அதேசமயம் விஷால் எதிரிகளிடம் அடி வாங்கிக்கொண்டே மீண்டும் மீண்டும் சிலிர்த்து எழுந்து அனைவரையும் தாக்கும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் லாஜிக்காக வடிவமைத்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்த லத்தி படம் விறுவிறுப்பையும் வேகத்தையும் எதிர்பார்த்து வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

Most Popular

Recent Comments