திரையுலகை பொறுத்தவரை முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் நடிக்கும் படங்கள் நேருக்கு நேர் மோதும் நாட்கள் மிகுந்த பரபரப்பாக பேசப்படும். அதற்கு அடுத்ததாக விஜய், அஜித் படங்களுக்கு தான் அப்படி ஒரு போட்டி இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த ஜில்லா படமும் அஜித் நடித்த வீரம் படமும் ஒரே நாளில் வெளியாகின. இந்த நிலையில் தற்போது வரும் 2023 பொங்கல் பண்டிகை வெளியீடாக விஜய் நடித்துள்ள வாரிசு படமும் அஜீத் நடித்துள்ள துணிவு படமும் மீண்டும் ஒரே நாளில் மோதுகின்றன.
இதனால் இரு தரப்பு ரசிகர்களிடமும் மிகுந்த பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இந்த படங்களுக்கு யாருக்கு எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்த பரபரப்பான கருத்துக்களும் தற்போது வெளியாகி வருகின்றன.
இதில் துணிவு படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவதாக அஜித்தை வைத்து அவர் இயக்கியுள்ள படம் இது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
அதேபோல விஜய் முதன்முதலாக தெலுங்கில் நுழைந்து நடித்துள்ள படம்தான் வாரிசு. இந்த படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் வினோத் சமீபத்தில் துணிவு படம் பற்றிய பல விசயங்களை தனது பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.
அப்போது அவரிடம் நீங்கள் வாரிசு, துணிவு இதில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என கேட்டதற்கு சற்றும் தயங்காமல் வாரிசு படத்தை தான் முதல் நாள் பார்ப்பேன் என்று கூறி ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்துள்ளார் வினோத்.
அதேசமயம் இதுபற்றி அவர் கூறும்போது இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்னை சிகளில் மாட்டிவிட முடியாது.. இதற்கு பதில் சொல்வது ரொம்ப ஈசி. நான் துணிவு படத்தின் இயக்குனர் என்பதால் அந்த படத்தை பலமுறை பார்த்து விட்டேன். அதனால் விஜய்யின் வாரிசு படம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்குத்தான் ஆர்வமாக இருக்கிறேன். அதனால் தான் முதல் நாள் வாரிசு படத்தை பார்ப்பேன்” என்று விளக்கமும் கூறியுள்ளார் வினோத்.