சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சாமான்ய ரசிகர்கள் ஆகட்டும் பிரபலமாக இருந்துகொண்டு சூப்பர்ஸ்டாரின் ரசிகர்களாக இருப்பவர்கள் ஆகட்டும்.. ஏதோ ஒரு வகையில் தங்களது வாழ்த்துக்களை விதம் விதமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் கலை இயக்குனர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான கிரண் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர். இன்னொரு பக்கம் இவர் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் கூட நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் தற்போது கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார், அந்த சமயத்திலேயே தனது கனவு நனவானதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆச்சரியம் தரும் வகையில் பரிசு ஒன்றை அளித்துள்ளார் கிரண்.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பல படங்களில் இடம் பெற்றுள்ள அவரது கதாபாத்திர தோற்றங்களை ஒரே போர்டில் வரைந்து அதை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பரிசாக அளித்துள்ளார் கிரண். தனது அத்தனை கதாபாத்திரங்களையும் ஒரே பலகையில் வரைந்ததை கண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியே வியந்து தான் போனார்.

இதுபற்றி கலை இயக்குனர் கிரண் கூறும்போது, “எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணம் இது. என் சிறு வயது கனவு இப்போது நனவாகி உள்ளது. உங்கள் முகத்தில் நான் கண்ட ஆனந்தம் போதும் என்றும் எனக்கு.. லவ் யூ தலைவா” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்





















