கதாநாயகர்களுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடும் நடிகைகளுக்கு வேண்டுமானால் அடுத்த படத்தில் யாருடன் ஜோடியாக நடிப்போம் என்கிற கவலை இருக்கலாம். ஆனால் நடிகை வரலட்சுமி சரத்குமாரை பொறுத்தவரை தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்துக்கொண்டு பயணித்து வருகிறார்.
அதனால் கதையை தாங்கிப்பிடிக்கும் நாயகி, வலுவான வில்லி என எந்த கதாபாத்திரமானாலும் இயக்குனர்கள் வரலட்சுமியை நோக்கித்தான் வருகிறார்கள் சமீபத்தில் வெளியான யசோதா படம் இதற்கு லேட்டஸ்ட் உதாரணம்..
அந்தவகையில் இயக்குனர் அணில் கட்ஸ் என்பவர் இயக்கத்தில் சபரி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் வரலட்சுமி. கணேஷ் வெங்கட்ராமன், மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சைகாலஜிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப்படத்தில் வரலட்சுமி, தான் இதற்கு முன்பு ஏற்று நடித்திராத கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் வெவ்வேறு பரிமாணங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இந்தப்படத்தில் தனக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார் வரலட்சுமி. விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.