கிராமத்து பின்னணியில் எளிய மனிதர்களின் வாழ்க்கை, மகிழ்ச்சி கோபம், துரோகம் என பலவித குணாதிசயங்களையும் கொண்டு கலவையான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் முத்தையா. சமீபத்தில் கார்த்தியை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கிய விருமன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். இது ஆர்யாவின் முப்பத்தி நான்காவது படமாக உருவாகிறது.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர்.

இந்த படத்தின் துவக்க விழா பூஜை இனிதே நடைபெற்று படப்பிடிப்பும் தற்போது துவங்கியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் டெடி, சார்பட்டா பரம்பரை, கேப்டன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் ஆர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு கிராமத்து பின்னணியில் உருவாகும் கதைக்களத்தில் நடிக்கிறார் என்பது இந்த படத்தின் மீது இப்போது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


























