வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகனான இவர் சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டு தனது தாய்மாமனிடம் முறைப்படி இசை பயின்று குறுகிய காலத்திலேயே இசையமைப்பாளராக முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்து காட்டினார்.

அதைத் தொடர்ந்து சில வருடங்களிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு முன்னேறினார். அடுத்ததாக விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திற்கும் இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் ஒரு கட்டத்தில் தானும் ஹீரோவாக இன்னொரு அவதாரம் எடுத்தார்.

ஒரு நடிகராகவும் தன்னை சிறப்பாக வடிவமைத்துக்கொண்டு வெற்றி தோல்விகளை சரிசமமாக பெற்று ஒரு நல்ல நடிகனாக மாறியுள்ள ஜிவி பிரகாஷ் தற்போது பிஸியான கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிப்பில் தீவிரமாக இருப்பதால் இசையமைப்பதை குறைத்துக்கொண்டார் என்கிற தோற்றம் பலருக்கும் எழுவது சகஜம் தான்.

ஆனால் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் இசையமைத்து வரும் படங்களின் படக்குழுவினர் அவருக்காக சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருவதைப் பார்க்கும்போது தான் இத்தனை படங்களிலா மனிதர் இசையமைத்து கொண்டிருக்கிறார் என்கிற பிரமிப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக தனுஷ் தமிழ் தெலுங்கில் நடித்து வரும் வாத்தி, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன், விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி என மிகப்பெரிய பட்டியல் ஒன்று நீள்கிறது.

அந்த வகையில் தன்னை திரையுலகில் அடையாளம் காட்டிய இசைக்கும் ரசிகர்களிடம் அடையாளம் காட்டிய நடிப்புக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து இசை நடிப்பு என இரட்டை குதிரை சவாரியை வெற்றிகரமாக செய்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவருக்கு நம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்