சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பர்கள் பட்டியலில் மிக முக்கியமானவர் நடிகர் சரண்ராஜ். 90களில் வெளியான அவரது படங்களில் பெரும்பாலும் இவர் இடம் பிடித்திருப்பார். இதுவரை ஒன்பது மொழிகளில் கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரண்ராஜ், தற்போது தனது மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்காக இயக்குனராக மாறியுள்ளார்.

இவர் பைலட்டாக பணியாற்றியவர், கொரோனா தாக்கம் ஆரம்பமான காலகட்டத்தில் தனது பணியை விட்டு விலகி நடிப்பு கல்லூரியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டு இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் அவரது மகன் தேவ் சரண்ராஜ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுஷ்மிதா சுரேஷ் நடிக்கிறார். ஒரு குப்பத்து மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதைதான் இந்த படம்.

இந்த படத்தில் இந்த ஜோடி மட்டுமல்லாது ஆதி தேவ் மற்றும் பிரியதர்ஷினி அருணாச்சலம் என்கிற இன்னொரு காதல் ஜோடியும் இடம்பெறுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கத்தில் துவங்கியுள்ளது, இங்கே ஒரே கட்ட படப்பிடிப்பாக்க 45 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


























