டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் டான். சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் கல்லூரி கதைக்களத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள்மோகன் தான் இந்த படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஏற்கனவே மார்ச் 25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.. ஆனால் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படமும் அதே தேதியில்தான் வெளியாக இருப்பதால் டான் படத்தை மே-13ல் வெளியிடுவதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இதற்கு இன்னொரு காரணம் ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதும் லைகா நிறுவனம்தான், அதனாலேயே தான் படத்தை மே மாதம் தள்ளி வைத்தது.
அதேசமயம் இந்தப் படம் மே மாதத்தில் கூட ரிலீசாகுமா என்பதில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அதாவது 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே-11 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு துவங்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. டான் பட ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியான பின்னர்தான் தான் இந்த அறிவிப்பு வெளியானது.
தேர்வு நேரத்தில் படம் ரிலீஸானால் அது வசூல் ரீதியாக படத்திற்கு பின்னடைவை கொடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.. காரணம் இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் தான் சிவகார்த்திகேயன் படத்திற்கு அதிக அளவில் ரசிகராக ரசிகர்களாக இருக்கின்றனர். அதனால் மாணவர்களின் பொதுத்தேர்வை கணக்கில்கொண்டு ஒருவேளை தேர்வுக்கு பின்னர் தான் படம் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்றும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.