மீண்டும் இணையும் தனுஷ் செல்வராகவன் யுவன் கூட்டணி !
8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி என செல்வராகவன் போட்ட மாஸ் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
செல்வராகவன் யுவன் சங்கர் ராஜாவில் வெளியான அனைத்து படங்களின் ஆல்பங்களும் ரசிகர்களை இன்னமும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காதல் கொண்டேன் படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆவதற்கு முன்பே துள்ளுவதோ இளமை படத்திலேயே இந்த ஹிட் காம்போ இணைந்து விட்டது. தொடர்ந்து தனது பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாவைத் தான் இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்தார் செல்வராகவன். இவர்களது கூட்டணியில் வெளியான பல பாடல்கள் இன்னமும் திரை வானில் மேஜிக் செய்து வருகின்றன.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி என இதுவரை 7 முறை இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். இந்நிலையில், 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றப் போவதில் மிக்க மகிழ்ச்சி என யுவன் உடன் இருக்கும் மாஸ் போட்டோவை போட்டு வைரலாக்கி உள்ளார் செல்வராகவன்.
எனக்கும் அதே சந்தோஷம் தான் சார்.. சீக்கிரமே இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என செல்வராகவனின் ட்வீட்டை ரீட்விட் செய்து யுவன் சங்கர் ராஜா போட்டுள்ள ட்வீட்டை யுவன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள படத்தை செல்வராகவன் இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என தயாரிப்பாளர் தாணு பதிவிட்டுள்ளார் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷின் அடுத்த படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.