இயக்குனர் சமுத்திரக்கனி தான் இயக்கும் படங்களாகட்டும் அல்லது நடிக்கும் படங்களாகட்டும், பெரும்பாலுமே நேர்மையான, நேர்மறையான கதாபாத்திரங்களில் நடிப்பதையே விரும்புவார். தற்போது வில்லனாக சில படங்களில் நடிப்பது வேறு விஷயம். அந்த அளவிற்கு சமுத்திரக்கனி என்றாலே சமூகத்திற்கு ஏதாவது நல்லது சொல்வார், நேர்மையான விஷயங்களை வலியுறுத்துவார் என்கிற பிம்பம் ரசிகர்களின் மனதில் பதிந்து உள்ளது,
மீண்டும் அப்படி ஒரு கதாபாத்திரமாக திரு.மாணிக்கம் என்கிற படத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி, தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்த முன்னணி இயக்குநர் நந்தா பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார்.
அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பரபரப்பான திரு.மாணிக்கம் திரைப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாடோடிகள் படத்தில் சமுத்திரக்கனியால் அறிமுகப்படுத்தப்பட்ட அனன்யா இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா… அதற்கான சாத்தியம் இருக்கின்றதா… என்ற கேள்விகளோடு இந்தப் படம் தொடங்குகிறது… கதையின் நாயகன் மாணிக்கத்தின் மனைவி… அவனுடைய பெரியப்பா… பெரியம்மா… மச்சினன்… மாமியார் இப்படி ஒரு கூட்டமே தனி மனிதன் மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் துரத்துகிறது… கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும்… அவனைத் தொடர்ந்து துரத்துகிறார்கள். இவர்கள் எல்லோரையும் தாண்டி மாணிக்கத்தின் மனசாட்சியும் அவனைத் துரத்துகிறது… இந்தப் போராட்டத்திலிருந்து மாணிக்கம் எப்படித் தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தைச் செய்கிறான் என்பதுதான் பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் திரு.மாணிக்கம் படத்தின் சாராம்சம்… சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்