சமீப காலமாக போதைப்பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது பழக்கத்தையும் தாண்டி தற்போது போதைப்பொருள் உபயோகிக்கும் அளவுக்கு மாறிவிட்டனர்.
இதுகுறித்து தனது வருத்தத்தையும் வேதனையையும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும்போது வெளிப்படுத்தியுள்ள நடிகர் கார்த்தி, விளையாட்டை ஊக்குவிப்பதுதான் இதுபோன்று தவறான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கும் என்று இதற்கான ஆலோசனை ஒன்றையும் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் பேசும்போது, “இன்று பள்ளி மாணவர்கள் பலர் சர்வ சாதாரணமாக போதைப்பொருளை உபயோகிப்பதை பார்க்க முடிகிறது. மாணவர்களை விளையாட்டின் பக்கம் கவனத்தை திருப்ப செய்வதுதான் இது போன்ற பழக்கங்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர உதவும்.
தமிழக அரசும் இதுபோன்ற விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களை ஊக்குவிக்கும்போது தான் மாணவர்களின் கவனம் ஒரே திசையில் குவிந்து, அதன்மூலமாக ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்ற துவங்குவர் என்று கூறியுள்ளார்.