கிராமத்து இளைஞன் லியோ சிவகுமாருக்கு சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என ஆசை. எதிர் வீட்டு அய்யர் பொண்ணு சஞ்சிதா செட்டி அவரை காதலிப்பதுடன் உற்சாகப்படுத்தி சென்னைக்கும் அனுப்பி வைக்கிறார். இயக்குனர் பிரபு சாலமணியிடம் உதவியாளராக சேர்கிறார் லியோ சிவகுமார். கொஞ்ச நாள் கழித்து சஞ்சிதாவுக்கும் சென்னையில் வேலை கிடைத்து ஹாஸ்டலில் வந்து தங்குகிறார்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு பார்த்து தங்கலாம் என முடிவெடுக்கின்றனர். நாயகன் வீட்டில் சம்மதம் கிடைக்க சஞ்சிதாவின் தரப்பிலோ அவரது தந்தை மட்டுமே சம்மதிக்கிறார். சித்தியும் முறை மாமனும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
இதை மீது திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று அப்படியே சொந்த வீடு என வாழ்க்கை ஓரளவு சரியாக போய்க் கொண்டிருக்கிறது. லியோ சிவகுமாருக்கு தனியாக படம் இயக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்த நிலையில் தான் அவரது வாழ்க்கையில் விதி எதிர்பாராமல் விளையாடுகிறது. அதன்பிறகு இவர்களின் வாழ்க்கை திசை மாறியதா ? தடுமாறியதா ? என்பது மீதிக்கதை.
பட்டிமன்ற பேச்சாளராக பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவகுமார் இந்தப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அறிமுகப்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அழகான முகபாவம், வசன உச்சரிப்பு, உடல் மொழி என முதல் படத்திலேயே ஒரு கைதேர்ந்த நடிகராக மாறியுள்ளார். கோபம், ஏக்கம், விரக்தி, உற்சாகம் என விதவிதமான முக பாவங்களை சரியாக பிரதிபலித்துள்ளார். அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
நாயகி சஞ்சிதா செட்டி பத்து வருடத்திற்கு முன் பார்த்தது போன்று இப்போதும் அப்படியே இருப்பது இவருக்கு பிளஸ் பாயிண்ட். ஒரு காதலியாக, குடும்ப தலைவியாக, மகளாக என ஒவ்வொரு கட்டத்தையும் தனது நடிப்பால் அழகாக வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார்.
இயக்குனர் பிரபு சாலமன் இந்த படத்தில் அவராகவே வந்து போவதால் அவரையே நேரில் பார்த்தது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. நாயகியின் தந்தையாக நடித்துள்ளவர் நடிப்புக்கு புதியவர் என்றாலும் அவர் நடிப்பு எதார்த்தமாக பாராட்ட வைக்கிறது. ராஜ்கபூர், உள்ளூர் போஸ்ட்மேன் சிங்கம்புலி, வில்லனாக வரும் முரட்டு மீசை மனிதர் என மற்றும் சில கதாபாத்திரங்கள் கதையை நகர்த்த உதவியிருக்கின்றன.
அழகான நீரோடை போல சென்று கொண்டிருக்கும் இந்த கதைக்கு அவ்வப்போது சில தடங்கல்களை இயக்குனர் ஆர்.விஜயகுமார் ஏற்படுத்தி அதை சமாளித்து இருக்கும் விதம் அருமை. அதேசமயம் கிளைமாக்ஸில் அப்படி ஒரு முடிவை கொடுத்திருக்கத்தான் வேண்டுமா என்கிற எண்ணம் பட முடியும்போது நமக்கு ஏற்படுகிறது.