பாபா படத்தில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கும். அதாவது பதவியும் பட்டமும் தானாக தேடி வருகிறது என்றால் அது பாபாவுக்கு மட்டும்தான் என்பதுதான் அந்த வசனம். அது அந்த சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மட்டுமே பொருந்தும்.

காரணம் இந்தியாவிலுள்ள பல அரசியல் பிரபலங்கள், அமைச்சர்கள் தமிழகத்திற்கு, குறிப்பாக சென்னை வரும்போது பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்திக்க தவறுவது இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் வரும் அமைச்சர்கள், பிரதமர்கள், தூதர்கள் உள்ளிட்ட பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவர்கள் இல்லத்திற்கு சென்று சந்திப்பதில் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இலங்கையில் இருந்து அமைச்சர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நேரில் வந்து சந்தித்தார். இலங்கைக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா தூதர் பார்ரி ஓ பார்ரல் என்பவர் தமிழகத்திற்கு வந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தார்.

சந்தித்தது மட்டுமே என்றால் பரவாயில்லை இந்த சந்திப்பு குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “நாடுகளுக்கு இடையில் உள்ள மக்களை ஒன்றுக்கொன்று இணைப்பதிலும் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் சினிமாவுக்கு தொடர்புண்டு. சாதனை நடிகரான ரஜினிகாந்தை சந்தித்து பேசியது அற்புதமானது. அவரது அடுத்த படமாக ஜெயிலர் படத்திற்காக எனது வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல ஆஸ்திரேலியா நாட்டு தூதரக ட்விட்டர் பக்கத்தில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிடும்போது வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு! என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது தான் ஆச்சரியம்.