பாலிவுட்டில் பிரபல இயக்குனராக, நடிகராக இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்கியுள்ள ‘கென்னடி’ என்கிற திரைப்படம் தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுவதற்காக கலந்து கொண்டுள்ளது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்காகவே விக்ரமின் ஒரிஜினல் பெயரான கென்னடி என்கிற பெயரையே டைட்டிலாக வைத்ததாகவும் கூறினார்.
ஆனால் அதன்பின் விக்ரம் தரப்பிலிருந்து தனக்கு எந்த ஒரு ரெஸ்பான்ஸும் கிடைக்கவில்லை என்பதால் வேறு வழி இன்றி ராகுல் பட் என்கிற நடிகரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததாகவும் கூறினார்.
ஒரு பிரபல பாலிவுட் இயக்குனர், நடிகர் விக்ரம் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறியதை தொடர்ந்து திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விக்ரம்.
இது பற்றி அவர் கூறும்போது, “அன்புள்ள அனுராக் காஷ்யப்.. சோசியல் மீடியாவில் நமது நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒரு சலசலப்பு காரணமாகவே இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை மீண்டும் நினைவுபடுத்தி பார்த்தேன். நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் என்னிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்று கூறியதாகவும் வேறு ஒரு நடிகரிடம் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது.
அப்போது நானே உடனடியாக உங்களை தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கினேன். அந்த சமயத்தில் நான் பயன்படுத்தி வந்த மெயில் ஐடி மாற்றப்பட்டதையும் அந்த இரண்டு வருட காலத்தில் எனது மொபைல் எண்கள் மாற்றப்பட்ட தகவலையும் உங்களிடம் விளக்கினேன்.
அப்போது கூட இந்த படத்தில் நான் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன் என்பதையும், காரணம் இது என்னுடைய பெயரில் உருவாகும் படம் என்பதையும் குறித்து உங்களிடம் கூறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தன்னை தொடர்பு கொள்ள முடியாதபடி தன்னுடைய ஈமெயில் மற்றும் மொபைல் எண்கள் மாற்றப்பட்டதை விக்ரம் ஒப்புக்கொண்டாலும் அடுத்ததாக தானே முன்வந்து அனுராக் காஷ்யப்பிடம் இது பற்றி விளக்கம் கூறினாலும் அந்த இடைப்பட்ட காலத்தில் விக்ரமை தொடர்பு கொள்ள முடியாததால் தான் அனுராக் காஷ்யப் இப்படி வேறு ஒரு நடிகரை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.