இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி திரையுலகில் தனது முதல் அடியை ஒரு தயாரிப்பாளராக எடுத்து வைத்துள்ளதுடன் முதல் முறையாக தமிழ் திரை உலகில் தனது படத்தை தயாரிக்கிறார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவுரவம்.

எல்.ஜி.எம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, லவ் டுடே புகழ் இவானா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

அவரே இந்த படத்திற்கு இசையும் அமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வை நேரில் கண்டுகளிக்க எல்ஜிஎம் படக்குழுவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் இன்ப அதிர்ச்சியுடன் இந்த போட்டியை காண வருகை தந்தனர்.
தோனியின் சாதுரியமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை வெற்றி பெற செய்த தருணத்தை நேரில் கண்டு ரசித்த படக்குழுவினர், தோனியின் மாயாஜால வித்தையை மெய் மறந்து ரசித்து பாராட்டினர்.


























