தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது தந்தை பி.எஸ்.மணி என்கிற சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயரிழந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் அஜித்தின் தந்தை பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்.
இந்த நிலையில் அவர் காலமாகி உள்ள தகவலை தெரிவித்துள்ள அஜித் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்ம், “எங்கள் தந்தையார் சுமார் 60 ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும் அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும் எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதிச்சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.
எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும் இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும் இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இன்று முற்பகல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்திற்கு அஜித்குமாரின் தந்தையார் உடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இருப்பினும் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அஜித் வீட்டிற்கு நேரிலேயே சென்று அவர்கள் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி தனது ஆறுதலை தெரிவித்து வந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.