சில மாதங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக வெளியான யசோதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு சில காலம் தசை நார் அழற்சி நோயால் அவதிப்பட்ட சமந்தா அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதற்கு முன்னதாகவே தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சாகுந்தலம் என்கிற புராண படத்தில் நடித்து முடித்து விட்டார் சமந்தா.
இந்தப்படம் கடந்த பிப்ரவரி மாதமே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் இதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. புராண காலத்து காவியமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தாவும் துஷ்யந்த மகாராஜா கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். முக்கியமான வேடத்தில் அதிதி பாலனும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை சமந்தா பார்த்துவிட்டு பிரமிப்பு விலகாத நிலையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடைசியில் நான் இன்று சாகுந்தலம் படத்தை பார்த்து விட்டேன்.. குணசேகர் சார்.. நீங்கள் என் இதயத்தை பெற்று விட்டீர்கள்.. என்ன ஒரு அற்புதமான படம்.. நமது பெருமை மிகுந்த புராண காவியங்களில் ஒன்றை பிரமிக்க வைக்கும் விதமாக உயிர் கொடுத்துள்ளீர்கள். நமது குடும்ப ரசிகர்கள் விரைவில் இந்த படத்தை உணர்ச்சிப்பெருக்குடன் கண்களை துடைத்தபடி பார்க்கும் அந்த நாளுக்காக என்னால் இன்னும் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்