இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள படம் விடுதலை. சூரி கதியின் நாயகனாகவும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது.
வழக்கமாக வெற்றி மாறன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்த நிலையில் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இந்த விடுதலை படத்திற்காக கை கோர்த்துள்ளார் வெற்றிமாறன்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.
விழா துவங்குவதற்கு முன்னதாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் நேரடி இன்னிசை கச்சேரியாக நடத்தப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் இந்த இன்ப அதிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த விழாவில் இந்த படத்திற்காக இளையராஜாவே எழுதி பாடிய காட்டு மல்லி என்கிற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் இசைஞானி இளையராஜா பேசும்போது, வெற்றிமாறன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய கதை களத்தில் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் இந்த படம் நிச்சயமாக ஒரு புதுமையான படமாக இருக்கும். 1500 படங்களுக்கு இசையமைத்தவன் என்கிற அனுபவத்தில் நான் இதை சொல்கிறேன் என்று கூறினார் இளையராஜா.