V4UMEDIA
HomeNewsKollywood"வாத்தி படம் மூலம் நான் எடுத்து செல்லும் பெருமை இதுதான்” ; சம்யுக்தாவை நெகிழ வைத்த...

“வாத்தி படம் மூலம் நான் எடுத்து செல்லும் பெருமை இதுதான்” ; சம்யுக்தாவை நெகிழ வைத்த மதுரை

நாயகி சம்யுக்தா இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா மேனன் என்று என்னை அழைக்க வேண்டாம். எந்த ஒரு ஜாதி பெயரையும் சேர்த்துக்கொள்ள நான் விரும்பவில்லை. சம்யுக்தா என்று தான் இந்த வாத்தி பட டைட்டில் கார்டில் கூட குறிப்பிட்டு இருக்கிறார்கள். பள்ளியில் பேர் சேர்க்கும்போது பெரியவர்கள் அப்படி சேர்த்து விட்டதை நாம் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. இப்போது மாற்றிக் கொள்வது என்பது நம் விருப்பம் தானே.. வேறு சில நட்சத்திரங்கள் இப்படி தங்கள் பெயருடன் ஜாதிப்பெயரை சேர்த்துக் கொண்டிருப்பதை பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது

தமிழ் எனது இளமைக்காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த மொழி. குறிப்பாக சின்ன வயதில் முஸ்தபா முஸ்தபா பாடல் மூலம் தமிழ் மீது ரொம்பவே ஆர்வமானேன். அதன்பிறகு தமிழ் பாடல்களை அதிகமாக கேட்க ஆரம்பித்தேன். இதுவரை நான் கேட்ட பாடல்களில் தமிழ் மொழியை போல வேறு எந்த மொழியிலும் இனிமையான பாடல் வரிகளை கேட்டதில்லை. சினிமா பாடல்களிலேயே அதிகம் இனிமையான பாடல் வரிகளை கொண்டது தமிழ் மட்டும்தான். இந்த படத்திற்கு கூட நானே தமிழில் டப்பிங் பேச விரும்பினேன். அதற்காக முயற்சி செய்தாலும், படப்பிடிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் என்னால் டப்பிங் பேச முடியாமல் போனது.

மலையாளத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியும் எனக்கு தெரியும். படப்பிடிப்பின்போது எனது கதாபாத்திரத்திற்காக முதலில் தமிழ் வசனங்களை பேசுவதற்காக தயாராகி, அந்த காட்சி படமாக்கி முடிந்ததும் தெலுங்கு வசனங்களுக்காக மீண்டும் என்னை தயார்படுத்தி கொள்வேன்.

தனுஷ் போன்ற மிகச்சிறந்த நடிகருடன் நடிக்கும்போது கொஞ்சம் டென்ஷன் இருக்கவே செய்தது.. காரணம் அவர் சிங்கிள் டேக்கில் ஓகே செய்பவர். என்னால் அவருக்கு எதுவும் தொந்தரவு வந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அப்படியே மீறி சில தவறுகள் வந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார் தனுஷ்.

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு ஒருசில படங்களில் நடித்தேன். அப்போது அந்த படங்களில் நடிப்பது குறித்து நான் எடுத்தது குழந்தைத்தனமான முடிவு. மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம் மூலமாகத்தான் தமிழுக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். அது இந்த வாத்தி படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்த படத்தில் மாணவர்களுடன் ரொம்பவே ஜாலியாக பழகும் மீனாட்சி என்கிற உயிரியல் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதற்காக நான் பள்ளியில் படித்தபோது இதேபோன்று குணாதிசயங்களுடன் எனக்கு பாடம் சொல்லித் தந்த தீபா டீச்சரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அதையே நடிப்பில் வெளிப்படுத்தினேன்.

இந்தப்படத்தில் கல்வி முறையில் உள்ள சில பிரச்சனைகள் பற்றி கூறியுள்ளோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எனது பள்ளி காலகட்டம் என்பது மோசமான அனுபவமாகவே இருந்திருக்கிறது. என்னுடன் படித்தவர்கள் வெவ்வேறு விஷயங்களில் நன்கு திறமையானவர்களாக இருந்தாலும் படிப்பில் அவர்கள் தடுமாறுவதை பார்க்க முடிந்தது. இன்ஜினியரிங் படித்த பெண் கூட அதை முடித்துவிட்டு தனக்கு விருப்பமான நடன துறையில் தான் சேர்ந்தார். நானும் பிளஸ் டூ மட்டுமே படித்துள்ளேன். சினிமா மீதான ஆர்வம் இருந்ததால் இங்கே வந்து விட்டேன்.

பெர்சனலாக சொல்லவேண்டும் என்றால் ஒரு டிகிரி இருந்தால் தான் நமக்கு பிடித்த வேலையை பார்க்க முடியும் என்று சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. அதேசமயம் இந்த படத்தில் நடித்தபோது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு எவ்வளவு பெரிய மாற்றத்தை அவர்களது வாழ்க்கையில் கொண்டு வருகிறது என்பதை உணர முடிந்தபோது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது.

இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் இந்த படத்தில் இருந்து நான் விலகி விட்டதாக சில செய்திகள் வெளியாகின. யாரோ அழகாக கற்பனை செய்து உருவாக்கிய செய்தி அது. அதனால் எனக்கு முன்பை விட அதிக எதிர்பார்ப்பு, பப்ளிசிட்டி, அதிக ரசிகர்கள் என நன்மையே கிடைத்தது.

மலையாளத்தில் நடிப்பதையும் தமிழ் படங்களில் நடிப்பதையும் ஒப்பீடு செய்ய தேவையில்லை. தமிழ் சினிமாவில் எந்த படங்களை கமர்சியலாக எடுக்க வேண்டும், எந்த படங்களை ரியலிஸ்டிக்காக எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மலையாளத்தில் கூட தமிழ் படங்களுக்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது.

முதன்முறையாக இந்தப்படத்தில் தான் ஒரு நடன இயக்குனர் சொல்லிக்கொடுத்த அசைவுகளுக்கு நடனம் ஆகியுள்ளேன். தெலுங்கில் விருபாக்சி, டெவில் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.. எல்லாமே பீரியட் படங்கள் தான்.. எப்போது ஒரு கதையைக் கேட்டதும், உடனே நான் நடிக்கிறேன் என்று சொல்கிறேனா அந்த படங்கள் எனக்கு நன்றாகவே அமைந்திருக்கின்றன.. யோசித்து சொல்கிறேன் எனக்கூறி பின்னர் ஒப்புக்கொண்ட படங்கள் பெரிய அளவில் பலன் தரவில்லை.

கதையை தாங்கி பிடிக்கும் கதையின் நாயகியாக நடிக்க ஆசை தான் என்றாலும் அதற்குள் இன்னும் சில படங்களில் நடித்து விட விரும்புகிறேன். அதேசமயம் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் இந்த சூழலையும் ரொம்பவே அனுபவித்து நடித்து வருகிறேன்.

வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்பு வேறொரு படத்திற்காக தென்காசிக்கு சென்றிருந்தபோது, அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்துவிட்டு ஏற்கனவே யூட்யூப் மூலமாக கேள்விப்பட்டிருந்த மதுரை பன் புரோட்டா சாப்பிடலாம் என முகத்தில் மாஸ்க் அணிந்தபடி ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். அப்போதுதான் தான் ‘வா வாத்தி’ பாடல் ரிலீஸ் ஆகியிருந்த நேரம். நான் மாஸ்கை கழட்டியதுமே அங்கிருந்து என்னை பார்த்த சிலர் ‘ஏ நம்ம டீச்சரம்மா’ என்று ஆச்சரியமாக கூவினார்கள். அந்த பாடல் ஏற்படுத்திய மேஜிக் தான் இது. இந்த படத்தின் மூலம் நான் எனக்கென எடுத்துச் செல்வது இந்த பெருமையைத்தான்” என்று கூறினார்.

வரும் பிப்-17ஆம் தேதி இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது

Most Popular

Recent Comments