நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அதுமட்டுமல்ல மற்ற மொழிகளை இருந்தும், குறிப்பாக மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் இருந்து நடிகர் சுனி, பாலிவுட்டில் இருந்து நடிகர் ஜாக்கி சேராப் உள்ளிட்ட பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
அதேபோல மலையாள நடிகர் விநாயகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களால் சித்தப்பு என செல்லமாக அழைக்கப்படும் பருத்திவீரன் சரவணன் இந்த படத்தில் நடிப்பதாக தற்போது கூறியுள்ளார்.
படக்குழுவினர் தரப்பில் இருந்து இவர் நடிப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படாவிட்டாலும் சமீபத்தில் சரவணன், தான் நடித்துள்ள நான் கடவுள் இல்லை படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காட்சிகளில் நானும் இணைந்து நடித்துள்ளதாக கூறியுள்ளார் சரவணன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிரமான ரசிகராக இருந்து வருவதாகவும் அவருக்காக ரசிகர் மன்றம் எல்லாம் ஆரம்பித்தேன் என்றும் முன்பே கூறியுள்ள சரவணன் இப்போது அவருடைய படத்திலேயே நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.