தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல்களுடன் இந்தப்படத்திற்கு முதன்முதலாக வசனமும் எழுதியுள்ளார்.
தமிழில் வெளியாகி இரண்டு தினங்கள் கழித்து தற்போது தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் வெளியாகி உள்ள இந்த படம் அங்கேயும் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்
தயாரிப்பாளர் தில் ராஜு பேசும்போது, “விஜய் நடித்த படங்களில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல தெலுங்கில் ஆக்சன் பட ஹீரோக்களான ஜூனியர் என்டிஆரின் பிருந்தாவனம், பிரபாஸின் மிஸ்டர் பர்ஃபெக்ட், மகேஷ்பாபுவின் சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவை எல்லாமே மாஸ் ஹீரோக்களின் குடும்ப கதையம்சம் கொண்ட படங்கள். அப்படி இந்த வாரிசு படத்தின் கதையை வம்சி என்னிடம் சொல்லியபோது இதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன்.. விஜய்யுடன் ஒரே சந்திப்பிலேயே இந்த கதை ஓகே ஆனது.
சில படங்கள் தயாரிக்கும்போது பணம் நிறைய கிடைக்கும். சில படங்களில் பாராட்டு கிடைக்கும். இந்த வாரிசு படத்தில் பணம், பாராட்டு என இரண்டுமே ஒரு சேர கிடைத்துள்ளது. குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என எல்லோருமே இந்த படத்தை ரசித்து பாராட்டுகிறார்கள். வாரிசு இப்போதுதான் ஐந்து நாள் குழந்தையாக இருக்கிறது. மிக நீண்ட தூரத்திற்கு இந்த படத்தை எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஒரு மாதத்திற்கு பிறகும் கூட இந்த படம் தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக தான் ஓடும். காரணம் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை வந்து பார்ப்பார்கள்” என்று கூறினார்.