V4UMEDIA
HomeNewsKollywoodஐந்து வருட இடைவெளியை வாரிசு நிரப்பிவிட்டது ; நெகிழ்ச்சியில் நடிகர் ஷாம்

ஐந்து வருட இடைவெளியை வாரிசு நிரப்பிவிட்டது ; நெகிழ்ச்சியில் நடிகர் ஷாம்

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல்களுடன் இந்தப்படத்திற்கு முதன்முதலாக வசனமும் எழுதியுள்ளார்.

தமிழில் வெளியாகி இரண்டு தினங்கள் கழித்து தற்போது தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் வெளியாகி உள்ள இந்த படம் அங்கேயும் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்

நடிகர் ஷாம் பேசும்போது, “ஒரே சமயத்தில் வாரிசு துணிவு என இரண்டு படங்களும் வெளியான சூழ்நிலையில் இதை அழகாக கையாண்டு இரண்டு படங்களையும் சமமாக பாவித்த உதயநிதி ஸ்டாலினுக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் தில் ராஜு தினசரி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். அந்த அளவிற்கு சினிமாவின் மீது அவர் ரொம்ப ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தமிழில் இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும். இயக்குனர் வம்சி ஒரு அருமையான மனிதர். அழகான மனம் கொண்டவர். அதுதான் இந்த படமாக வெளிப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டப்பிங் முடித்துவிட்டு வரும்போது படம் எப்படி இருக்கிறது என என்னிடம் வம்சி கேட்டார். நாம் எவ்வளவுதான் அழகாக எடுத்து இருந்தாலும் டப்பிங், எடிட் பண்ணி இருந்தாலும் பின்னணி இசையில் தான் இந்த படத்தோட வெற்றியை தூக்கி நிறுத்தும் என்று கூறினேன். அது உண்மை என படம் பார்க்கும்போது நிரூபித்து விட்டார் இசையமைப்பாளர் தமன். படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும்போது நிறைய பேர் கண்கலங்கினார்கள். படப்பிடிப்பில் விஜய்யுடன் பழகிய நாட்களில் நான் கவனித்த ஒரு விஷயம் அவர் யாரைப்பற்றியும் எதிர்மறையாக பேசமாட்டார். யாரைப் பற்றியாவது எதிர்மறையாக சொன்னால் கூட கேட்டுக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து விடுவார். அப்போது இருந்து இப்போது வரை அதை கடைபிடித்து வருகிறார்.

புறம்போக்கு படத்தில் நடித்த பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளி விழுந்துவிட்டது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு சரியான படமாக வாரிசு வந்தபோது தளபதி விஜய் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது அந்த இடைவெளியை இந்த படம் நிரப்பி விட்டது. படம் பார்த்துவிட்டு பல நண்பர்கள் என்னை அழைத்து பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

Most Popular

Recent Comments