தமிழ் சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றால் நடிகர் கமல், அவருக்கு அடுத்தபடியாக விக்ரம் என்று சொல்லலாம். இதில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நடிகர் அஜித்தும் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் எல்லோருமே தங்களது வித்தியாசமான கதாபாத்திரங்களில் எவ்வளவு நேரம் மேக்கப் போடுவது என்றாலும் பொறுமையுடன் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருபவர்கள்.
தசாவதாரம் படத்தில் கமல் பத்து வேடங்களில் மேக்கப் போட்டார். சிட்டிசன், படத்தில் ஆழ்வார், வரலாறு என பல படங்களில் அஜித்தும் இதே போல் மேக்கப்பிற்காக மெனக்கெட்டு உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் நடித்த அந்நியன் மற்றும் ஐ படங்களுக்காக விக்ரமின் மேக்கப் மெனக்கெடல்கள் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தில் கூட எட்டுக்கு மேற்பட்ட விதவிதமான தோற்றங்களில் அசத்தியிருந்தார் நடிகர் விக்ரம். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்கிற படத்தில் நடித்து வரும் விக்ரம் இந்த படத்தில் கிராமிய தோற்றத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரத்திற்காக இவருக்கு மேக்கப் போடுவதற்கு தினசரி நான்கு மணி நேரம் செலவாகிறதாம். ஆனாலும் தனது திரையுலக பயணத்தில் இந்தப்படமும் இந்த கதாபாத்திரமும் மிகவும் பேசப்படும் என்பதால் ரொம்பவே அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த படத்தில் நடித்து வருகிறாராம் விக்ரம் .