இயக்குனர் பா.ரஞ்சித் குறுகிய காலத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கும் அளவிற்கு முன்னேறிய ஒரு சாதனையாளர். அதேசமயம் திரைப்படங்கள் மட்டுமே தனது இலக்கு என்பது போல செயல்படாமல் சமூகம் சார்ந்த பல விஷயங்களை முன்னின்று செய்து வருகிறார்.
குறிப்பாக தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக புதிய படைப்பாளிகளை திரையுலகுக்கு அறிமுகப்படுத்துவதுடன் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்குகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் பா ரஞ்சித்.
அந்த வகையில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020 மற்றும் 2021 ல் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி சென்னை, மதுரை மற்றும் கோவையில் 500 க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள்,100க்கும் மேற்ப்பட்ட திரைபட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் 15000 த்திற்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் என மிக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடைபெற்று மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்த வருடம் 2022 க்ற்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னையில் வருகிற 28-ஆம் தேதி சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் ஹாலில் வைத்து பறையிசை மேள தாளங்களுடன தொடங்கவுள்ளது.
நிகழ்ச்சியின் முதல் நாளான 28 ஆம் தேதி நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் பாடல்கள் மேடையில் அரங்கேற்றப்படுகின்றது.
இரண்டாவது நாளான 29 ஆம் தேதி கறுப்பின மக்களின் புரட்சி வடிவமாக திகழும் ஹிப் ஹாப் இசையும், சென்னையின் கருவூலமான கானாப் பாடல்களும் இடம்பெற உள்ளது.
மேலும் நிகழ்ச்சியின் கடைசி நாளான 30 ஆம் தேதி நம் மக்களின் பழம்பெரும் கதையாடல்களான ஒப்பாரி பாடல்கள் , விடுதலைக்கான எழுச்சிமிகு பாடல்கள் மேடையேற்றப் படுகின்றது.
திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் சார்ந்த சமூக அமைப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மக்களிசையை மக்களோடு கொண்டாட தயாராக இருக்கிறார்கள். நிகழ்ச்சிகளை காண கட்டணம் இல்லை