இயக்குனர் சேரன் தற்போது கதையின் நாயகனாக நடித்து வரும் படம் தமிழ்க்குடிமகன். பெட்டிக்கடை என்கிற விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீபிரியங்கா மற்றும் தீப்ஷிகா இருவரும் நடித்துள்ளனர்.
மேலும் மலையாள நடிகர் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருள்தாஸ், வேலராமமூர்த்தி, ரவிமரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விக்ரம்வேதா புகழ் சாம் சி எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ்க்குடிமகன் என டைட்டில் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இயக்குனர் கூறும்போது, “நம் ஊரில் சாதிகள் உருவானது தொழில் சார்ந்து தான். அதனால்தான் குலத்தொழில் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது குலத்தொழில் அழிந்துவிட்டது. குலம் மட்டும் அழியவில்லை. முன்பு ஒரு தொழில் செய்தவர்கள் கால மாற்றத்தில் வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள். அப்படி என்றால் அவர்களுக்கு அதே பழைய சாதிய அடைமொழி எதற்கு ?
அதற்கு பதிலாக அனைவருக்குமே சாதி என்கிற இடத்தில் தமிழ்க்குடிமகன் என்ற பெயரை குறிப்பிட வேண்டும் என இந்த படம் வலியுறுத்துகிறது. அதனால்தான் தமிழ்க்குடிமகன் என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளோம்.
இந்த படத்தில் நடிக்கும்போது இயக்குனர் சேரன் என்னிடம், பாரதி கண்ணம்மா படத்தில் கூட சாதிக்கு எதிராக ஒரு கருத்தை தான் அழுத்தமாக முன்வைத்தேன், ஆனாலும் என்னால் நான் சொல்ல நினைத்த விஷயங்களை முழுமையாக சொல்ல முடியவில்லை, இந்த படத்தில் நீங்கள் அதை தைரியமாக கூறியுள்ளீர்கள் என பாராட்டினார்” என்று கூறுகிறார் இசக்கி கார்வண்ணன்.