தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மகனாக அரசியல் அரங்கிலும் அதேபோல திரையுலகிலும் அடியெடுத்து வைத்தவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் காமெடி மற்றும் ஜனரஞ்சகமான படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கலகத்தலைவன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் உதயநிதி. அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொள்வேன் என்று அவர் கூறி இருந்தாலும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தை விளையாட்டுத்துறையின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சினிமாவில் இனி தான் நடிக்கப் போவதில்லை என்றும், தற்போது நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்தான் தான் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்றும் அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இவர் அமைச்சராக பதவியேற்றதற்கு நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்