விஷால் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் படம் லத்தி. வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ளார். சுனைனா கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் பிரபு, இயக்குனர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விஷால் நான் நடிக்க வந்த இந்த 18 வருடங்களில் வாங்காத அடியை இந்த படத்தில் வாங்கியுள்ளேன் என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் 80 நாட்கள் படமாக்கப்பட்டன. என்னுடைய மார்க்கெட் வேல்யுவை மீறிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்துள்ளனர் தயாரிப்பாளர்களான ரமணாவும் நந்தாவும்.
எனக்காக அவர்கள் சிபாரிசு செய்து கொண்டுவரும் கதை பிடித்து விட்டால் அவர்களை உள்ளே அழைத்து கட்டிப்பிடிப்பேன். கதை பிடிக்கவில்லை என்றால் இருவரையும் ரூமுக்குள் அழைத்து அடிப்பேன். ஆனால் இந்த படம் அவர்களை கட்டிப்பிடிக்க வைத்த ஒரு கதையாக அமைந்துவிட்டது.
இந்த படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இருவருமே பேசப்படுவார்கள். இந்த படத்தில் நடித்தபோது உடலெங்கும் பல இடங்களில் காயம்பட்டது 18 வருடத்தில் வாங்காத அடியையே வாங்கினேன்.
கேரளா சென்று சிகிச்சை எடுத்து வந்து அந்தக் காயங்கள், தழும்புகள் தெரியாமல் இருப்பதற்காகத்தான் முழுக்கை சட்டை அணிந்துள்ளேன்” என்று தான் காயம்பட்ட வலியை கூட நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் விஷால்.