சில படங்கள் சிறிய படங்கள் போல தோன்றினாலும் எதிர்பாராதவிதமாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் படங்களாக மாறிவிடுவதை பல சமயங்களில் பார்த்து இருக்கிறோம். அப்படி ஒரு பதமாக கடந்த வாரம் வெளியான லவ்டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துவிட்டது.
கோமாளி என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தில் தானே கதாநாயகனாகவும் அறிமுகமாகி படத்தை இயக்கியுள்ளார். இன்றைய இளைஞர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்ப, அதேசமயம் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி கொஞ்சம் கூட போரடிக்காமல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
தியேட்டர்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனியாக நேரம் ஒதுக்கி பார்த்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் பெற்று திரும்பியுள்ளார் படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இதைவிட நான் வேறு என்ன கேட்க முடியும் ? சூரியனுக்கு அருகில் நிற்பது போன்று இருந்தது எனக்கு.. அவர் என்னை அப்படி இறுக்கி அணைத்தது அவ்வளவு இதமாக இருந்தது.. அந்த கண்கள்.. அந்த சிரிப்பு.. அந்த ஸ்டைல்.. அந்த அன்பு.. என்ன ஒரு ஆளுமை.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் லவ்டுடே படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். ஒருபோதும் உங்களுடைய வார்த்தைகள் மறக்க முடியாது சார்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திப்பு குறித்த தனது பிரமிப்பை அழகான வார்த்தைகளால் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
இதற்கு முன்பு இவர் ஜெயம்ரவியை வைத்து இயக்கிய கோமாளி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து சர்ச்சையான ஒரு காட்சியை வைத்திருந்ததாக இவர்மீது ரஜினி ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கடும் விமர்சனத்தை வைத்தனர். பின்னர் அந்த காட்சி நீக்கப்பட்டது.
அதேசமயம் அடிப்படையில் பிரதீப் ரங்கநாதன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர்.. அந்த எண்ணத்தில் தான் அப்படி ஒரு காட்சியை வைத்தேனே தவிர வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை என்று பின்னர் அது குறித்து விளக்கமளித்தார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் நேரில் சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்று திரும்பியுள்ளது நிச்சயமாக அவரது திரையுலக பயணத்தில் குறுகிய காலத்தில் செய்த ஒரு சாதனை என்று சொல்லலாம்.