தமிழ் திரையுலகில் இருந்து அரவிந்த்சாமியும் மலையாளத் திரையுலகில் குஞ்சாக்கோ போபனும் என இரண்டு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து முதல்முறையாக நடித்துள்ள படமாக இந்த ரெண்டகம் படம் உருவாகியுள்ளது. இப்படி ஒரு எதிர்பார்ப்பிற்கு ஏற்ற படமாக இது அமைந்துள்ளதா ? பார்க்கலாம்.
மும்பையில் நடக்கும் கதைக்களம் இது. தனது சித்தப்பா ஆடுகளம் நரேனுடன் வசித்துவரும் குஞ்சாக்கோ போபன் தனது காதலி ஈஷா ரெப்பாவுடன் வெளிநாட்டிற்கு சென்று செட்டிலாக நினைக்கிறார். அதற்கு பணம் பெரிய அளவில் தேவைப்படுகிறது. அப்போது ஆடுகளம் நரேன் வேலைபார்க்கும் தாதா கும்பல் ஒன்று குஞ்சாக்கோ போபனிடம் ஒரு அசைன்மென்ட் தருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் அசைனார் என்கிற பெரிய தாதா பலியானதாகவும் அந்த விபத்தில் அவருக்கு வலதுகரமாக இருந்த தாவூத் என்பவன் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்து விட்டதாகவும் அந்த சமயத்தில் அந்த காரில் இருந்த 30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மாயமாக மறைந்து விட்டதாகவும் கூறுகின்றனர். மேலும் எப்படியாவது அந்த தாவூத்திடமிருந்து அந்த தங்கம் பற்றிய விபரங்களை சேகரித்து தருமாறும் அதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுப்பதாகவும் கூறி தாவூத் என்கிற நபராக தியேட்டரில் கேண்டீனில் வேலை பார்க்கும் அரவிந்த்சாமி என்பவரை காட்டுகின்றனர்.
அதன்பிறகு அரவிந்த்சாமியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நட்பாகும் குஞ்சாக்கோ போபன், அந்த விபத்து சம்பவம் நடந்த இடத்திற்கே நைச்சியமாக அவரை காரில் அழைத்துச் செல்கிறார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றால் ஒருவேளை அவருக்கு ஞாபகம் வரலாம் என்கிற நினைப்பில் அந்த இடத்திற்கு சென்றதும் எதிர்பாராத இரண்டு டுவிஸ்ட்டுகள் நடக்கின்றன. அதன்பின் என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.
கேங்ஸ்டர் படம் என்றாலும் படம் முழுக்க அதுபற்றியே பெரிய அளவில் காட்சிகளை வடிவமைக்காமல் ஒரு அழகான த்ரில்லராக இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இடைவேளைக்கு முன்பு வரை அரவிந்த்சாமியின் அப்பாவித்தனமான முகமும் அளந்து பேசும் வார்த்தைகளும் என அவரது அளவான நடிப்பு நமக்கு புதிது.
அதேபோல மலையாளத்தில் இருந்து முதன்முறையாக தமிழில் நுழைந்திருக்கும் குஞ்சாக்கோ போபனும் தனது க்யூட்டான நடிப்பால் நம் மனதை அள்ளுகிறார். துல்கர் சல்மான், பஹத் பாசில் போல இவரும் சில வருடங்களுக்கு முன்பே இங்கே தமிழில் நுழைந்திருக்கலாம் என்கிற ஆதங்கமும் ஏற்படுகிறது.
இந்த இரண்டு பேருக்கான நட்பும் காரில் அவர்கள் பயணிக்கும்போது நடக்கும் நிகழ்வுகளும் படத்தின் சுவாரஸ்யத்தை இன்னும் கூட்டுகின்றன. இடைவேளைக்கு பின் வரும் அந்த இரண்டு டுவிஸ்ட்டுகளுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புகைப்பிடிக்கும் பழக்கத்தை மையப்படுத்தி வித்தியாசமான கோணத்தில் தீவண்டி என்கிற படத்தை இயக்கி பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் டிபி.பெலினி என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்பது மும்பையிலிருந்து கோவா வழியாக தமிழகத்தை நோக்கிய குஞ்சாக்கோ போபன் அரவிந்த்சாமி இருவரின் பயணம்தான். அதிலும் நினைவுகளை மறந்த அரவிந்த்சாமி கோவா பாரில் நடத்தும் அதிரடி சண்டைக் காட்சி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
கதாநாயகி ஈஷா ரெப்பா ரொமான்ஸ், ஆக்ஷன் என கலந்துகட்டி அடித்திருக்கிறார் அதேபோல கிளைமாக்ஸில் குஞ்சாக்கோ போபன் எடுக்கும் அதிரடி மாற்றம் ரசிகர்கள் யூகிக்க முடியாத ஒன்று. மற்ற கதாபாத்திரங்களாக ஆடுகளம் நரேன், கொஞ்ச நேரமே வந்து செல்லும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் என பலரும் கதைக்கு கச்சிதமாக பொருத்தியுள்ளனர்.
அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாத படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ரெண்டகம் படம் ஒரு சரியான நொறுக்குத்தீனி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.