மலையாளத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். தற்போதைய முன்னணி நடிகர்களில் இவர்தான் எல்லோருக்கும் முந்திக்கொண்டு தமிழிலும் தெலுங்கிலும் கூடவே பாலிவுட்டிலும் முதன்முதலாக அடி எடுத்து வைத்து தற்போது பான் இந்தியா நடிகர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தெலுங்கில் இவர் நடித்துள்ள சீதாராமம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்துள்ளனர். ஹனுராகவபுடி என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றபோது அதில் பேசிய துல்கர் சல்மான், இனிமேல் காதல் கதைகளில் நடிப்பது இல்லை என முடிவெடுத்து இருப்பதாக கூறினார். சீதாராமன் படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததால் அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இதுதான் தனது கடைசி காதல் கதையாக இருக்கும் என்று கூறியுள்ள துல்கர் சல்மான் இனி ஆக்சன், கமர்சியல் கலந்த படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்..

மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் என சீனியர் ஹீரோக்களுக்கு அடுத்தபடியாக பிரித்திவிராஜ் மட்டுமே ஆக்சன் ஹீரோவாக வதம் வருகிறார். அதற்கு அடுத்த வரிசையில் இருக்கும் துல்கர் சல்மான் பஹத் பாசில், நிவின்பாலி ஆகியோர் நடிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார்களே தவிர ஆக்சன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது பான் இந்திய நடிகராக மாறிவிட்டதால் துல்கர் சல்மான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.