சமீபத்தில் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய்பல்லவி கதையின் நாயகியாக நடித்த கார்கி திரைப்படம் வெளியானது. சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததுடன் தியேட்டர்களிலும் மக்கள் இந்த படத்திற்கு வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து படத்திற்கு உறுதுணையாக ஆதரவு வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகை சாய்பல்லவி கூறும்போது, “இந்த படத்தை திரையரங்கிற்கு சென்று மக்களோடு மக்களாக பார்த்தேன். அவர்கள் பாராட்டுவதை விட தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்கள் என்று சொல்லலாம்.. அதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த திருநங்கை சுதா பேசும்போது, “இந்த நேரத்தில் இயக்குனருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் ஏன் திருநங்கையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று யோசித்தேன். இந்த படம் பார்த்த பிறகு எனது தோழிகள் பாராட்டினார்கள். என்னுடன் நெருங்கிய உறவினர்கள் மட்டும்தான் பேசுவார்கள்.. ஆனால் இந்த படம் வெளியான பிறகு. உறவினர்களும் என்னை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தனது பெருமிதத்தை பகிர்ந்து கொண்டார் திருநங்கை சுதா.