ஹீரோக்களை சுற்றிவந்து காதல் டூயட் ஆடிப்பாடியது போதும் என நினைத்து விட்டாரோ என்னவோ, நடிகை சமந்தா தற்போது கதைக்கும் கதையின் நாயகிக்கும் முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துவிட்ட அவர் தற்போது யசோதா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரிஷ் சங்கர் இயக்கி வருகின்றனர்.
யசோதா என்கிற பெயர் புராணகால பெண்களை ஞாபகப்படுத்தினாலும் இந்தப் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கும் அதிக வேலை இருக்கிறது. இதற்காக ஹாலிவுட்டிலிருந்து பிரபல சண்டை பயிற்சியாளர் யானிக் பென் என்பவரை வரவழைத்து சண்டைக் காட்சிகளை படமாக்கி உள்ளார்கள். இதற்காக ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு இந்த சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதுதவிர கொடைக்கானலிலும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.