கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 03 வரை தமிழகமெங்கும் பிற்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டுள்ளன குறிப்பாக தினசரி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், தினசரி தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள், ஜூனியர் ஆர்டிஸ்டுகள், நாடக நடிகர்கள் என பலரும் உணவின்றி தவிக்கின்றனர்.
பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அதன்பின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயரிப்பாளர்கள் என பலரும் உதவி செய்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்தில் உள்ள 1000 பேருக்கு, ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி மூட்டை மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் அனுப்பியுள்ளார். நிவாரணப் பொருட்களை ஏப்ரல் 25,26,27 ஆகிய மூன்று தினங்களில் சாலிகிராமத்தில் அமைந்துள்ள செந்தில் ஸ்டுடியோ வளாகத்தில் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை உறுப்பினர்கள் தங்களுடைய தென்னிந்திய நடிகர் சங்க அடையாள அட்டையுடன் நேரில் வருகை தந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தனர். இன்று (ஏப்ரல் 25) சென்னை சாலிகிராமத்திலுள்ள செந்தில் ஸ்டுடியோவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி திருமதி.கீதா, பொது மேலாளர் பால முருகன் ஆகியோர் முன்னிலையில் 600- க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு இன்று பொருட்கள் வழங்கப்பட்டது.