Home News Kollywood இரண்டு தேசிய விருதுகளை கைப்பற்றி சாதித்த திருச்சிற்றம்பலம்!

இரண்டு தேசிய விருதுகளை கைப்பற்றி சாதித்த திருச்சிற்றம்பலம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம்.

சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் அயன்,சிங்கம்,ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன்,சர்கார்,பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும், கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர்கள் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கூலி’ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் ஆகும்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இருவரும் ஏற்கனவே யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி போன்ற வெற்றி படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தில் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா,பிரகாஷ் ராஜ்,ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. 70-வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில், இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடன இயக்கம் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பன்மொழி நடிகையான நித்யா மேனன் தனது தலைசிறந்த நடிப்பின் மூலம் ஏற்கனவே தன்னை நிரூபித்தவர். தமிழிலும் 180, வெப்பம், காஞ்சனா 2, OK கண்மணி, மெர்சல் போன்ற படங்களிலும் முத்திரை பதித்தவர். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை பதிவு செய்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

மாபெரும் வெற்றி கூட்டணியான  தனுஷ் மற்றும் அனிருத் இணை நீண்ட நாட்களுக்கு பிறகு இத்திரைப்படத்தில் மீண்டும் சேர்ந்து சிறந்த வெற்றிப் பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தளித்திருந்தனர்.’தாய்க்கிழவி’,’மேகம் கருக்காதா’ உட்பட அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. இப்பாடல்களுக்கு நடன இயக்குனர்களாக சதீஷ் கிருஷ்ணன் மற்றும் ஜானி பணியாற்றியிருந்தனர்.

சதீஷ் கிருஷ்ணன் மாஸ்டர், எனை நோக்கி பாயும் தோட்டா,பிரின்ஸ்,அயலான்,RRR,தி வாரியர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் ஏற்கனவே உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம், அச்சம் என்பது மடமையடா, பீஸ்ட் போன்ற படங்களின் மூலம் நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

அதேபோல ஜானியும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக உள்ளார். தமிழிலும் டாக்டர், எதற்கும் துணிந்தவன்,பீஸ்ட், வாரிசு, ஜெயிலர் போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடன இயக்குனர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விருது பெற்றவர்களும் படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.