V4UMEDIA
HomeNewsKollywoodதணிக்கை சான்றிதழ் பெற்று வெளியீட்டுக்கு தயாரான 'ராயன்'!

தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியீட்டுக்கு தயாரான ‘ராயன்’!

தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும், அவரது 50-வது படமான ‘ராயன்’ திரைப்படம் வரும் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் படம் எவ்வளவு மணிநேரம் ஓடுகிறது போன்றவை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரிய அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதை அடுத்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம், யு/ஏ சான்றிதழ் பெற படக்குழு முயற்சித்தாக செய்திகள் வந்தன. ஆனால் “படக் காட்சிகள் சிறப்பாக உள்ளன, காட்சிகளை மாற்றினால் கதையோட்டம் மாறுபடும், ஆகவே ‘ஏ’ சான்றிதழே பரவாயில்லை” என்று படக்குழு தெரிவித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த படம் ஓடும் மணிநேரம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே தனுஷ் நடித்த ’துள்ளுவதோ இளமை’, ’காதல் கொண்டேன்’,’புதுப்பேட்டை’, ’பொல்லாதவன்’, ’வடசென்னை’ ஆகிய திரைப்படங்கள் ‘ஏ’ சான்றிதழ் வாங்கி உள்ள நிலையில் தற்போது ’ராயன்’ படமும் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘இசைப்புயல்’ஏ.ஆர். ரகுமான் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் ஜாக்கி கலை இயக்குனராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.

‘ராயன்’ திரைப்படம் வரும் 26-ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Most Popular

Recent Comments