
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மூலம் காக்கா முட்டை,விசாரணை,வடசென்னை மற்றும் பல தரமான படைப்புகளை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக ஆண்ட்ரியா ஜெரிமியா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுஷி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி, நிர்வாகத் தயாரிப்பாளரான S.P. சொக்கலிங்கம் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸுடன் கைகோர்த்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளது.’மாஸ்க்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க உள்ளார்.

சமீபத்திய மாபெரும் வெற்றி திரைப்படம் ஆன ‘ஸ்டார்’ திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் கவின் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் ஆண்ட்ரியா ஜெரிமியா உடன் முதல் முறையாக ஜோடியாக நடிக்க உள்ளார்.தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரான G.V. பிரகாஷ் குமார் அவர்கள் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் ‘தருமி’ என்ற குறும்படத்திற்காக பிஹைன்ட் வுட்ஸ் கோல்ட் மெடல் விருது விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளார். இவர் பெப்பர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற விளம்பர மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் ருஹானி ஷர்மா, சார்லி,பால சரவணன் மற்றும் அர்ச்சனா சந்தோக் முக்கியமான கதாபாத்திரங்களை நடிக்கின்றனர்.இத்திரைப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். R.ராமர் படத்தொகுப்பு பணிகளையும்.ஜாக்கி கலை இயக்கத்தையும்,பூர்த்தி மற்றும் விபின் ஆடை வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர்.

சென்னையைக் கதைக்களமாக கொண்டு டார்க் காமெடி திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.